திங்கள், 16 மார்ச், 2015

உப்பு வேலி - CYRIL in TAMIL


உப்பு வேலி வாசித்து ஆகி விட்டது ( 240 பக்கங்கள் ). இங்கிலாந்து நாட்டு நூலகத்தில் , ஆவணக் காப்பாளராக (preservator of documents & history ) , பணி புரிந்த ராய் மாக்சம் , இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட உப்பு&சர்க்கரை வணிக வரி வேலியைத் தேடிக் கண்டு பிடிக்கும் நூல்.
சிறில் அருமையாக மொழி பெயர்த்து உள்ளார், எந்தக் குறையும் இல்லை. 
இருந்தாலும் ,  இந்தியாவிற்கு வரும் எல்லா வெளிநாட்டினர்/வெளி நாட்டு வாசிகளும் புலம்பும் 
சுகாதரமற்ற குடிநீர், கழிவறைகள், ஒழுங்கற்ற ஆட்டோ, டேக்சிகள் , பேருந்து ரயில் நிலையக் குப்பைகள் குறித்த புலம்பல்களை மூல ஆங்கிலத்தில் வாசித்தால் இன்னும் சற்று கோபம் ஏறலாம்.
வெற்றிக் கொடி  கட்டில் , டக்லஸ் வடிவேலுவிடம் கேட்பாரே, அப்புறம் எதற்கு துபாயை விட்டு தென்காசி வந்தீரு .
இந்தியாவில் வருமானத்தை பெருக்கி, இங்கிலாந்தில் உள்ள தங்கள் உயர் அதிகாரிகள், ராஜ குடும்பத்தை மகிழ்வுடன் வைத்து இருப்போம் என்ற எண்ணத்தில் துவங்கும் உப்பு + சர்க்கரை வரி விதிப்பு எவ்வளவு கொடும் ஆசையாக மாறுகிறது என்பதை நன்கு விவரிக்கிறார். 

ஒரு ஆங்கிலேயராக இருந்து கொண்டு  (ROY), தன் நாட்டு முன்னாள் அதிகாரிகள், அரச வம்சத்தினர் இந்தியாவை , இந்திய மக்களை எவ்வளவு சூறை ஆடி இருக்கின்றனர் என்று எழுதும் பரந்த மனப்பான்மையைப் பாராட்ட வேண்டும்.  பல தடைகள் வந்த பொழுதும், தன் ஆய்வை நிறுத்தாது விட முயற்சியுடன் ,   விரும்பிய இடத்தைக் கண்ட செயல் மிகவும் போற்றுதலுக்கு உரியது .

பல பக்கங்களில் இந்தியாவின் உணவுகளை , குணங்களை , நகர வீதிகளை, மக்களின் உடை வண்ணங்களை எழுதி இருக்கிறார். வேறு நாட்டு வாசகர்களுக்கு இது சுவாரஸ்யமாக இருக்கலாம் .

அவுட் சொர்ஸ்ட் (outsourced) ஆங்கிலப் படத்திலேயே, இந்தியாவை ஒரு ஆங்கிலேயர் எவ்வாறு பார்க்கிறார் /பார்ப்பார் என்று உணர்ந்து விட்டோம், அப்படத்தின் சாயல் இந்த நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது .
தென்  இந்தியா குறித்து அதிகம் தகவல் இல்லை , ஒரு வேளை தென்  இந்தியாவில் சத்தம் போடாது உப்பு வரி ஒழுங்காக கட்டி வந்தோமா என்று தெரிய வில்லை.

உற்பத்தி வரி, சுங்க வரித் துறையில் ஊழியர்களின் ஊழல் என்பது கழக & காமராஜர் ஆட்சிக்கு முன்னர் கிளைவ் ஆட்சியிலேயே நடந்து இருக்கிறது . எனவே அந்தத் துறையின் DNA  அது.
காவல் புரிவோர்களின் மன நிலை, பிற பெண்களை அவர்கள் எவ்வாறு நோக்குவர் என்பது குறித்த விவரணைகள் அருமை.


உப்பு வேலி குறித்த தகவல்கள் /சோகம்/வருத்தம்/வேதனை மக்கள் மனதில் இருக்கக் கூடாது , வரும் தலைமுறைகளை மேலும் வருத்தம் அடையச் செய்யும். வரும் தலைமுறைகளின் மனதில் ஆங்கிலேயர், அரசு அதிகாரிகள், அதிகாரத்துவம் குறித்து வன்முறை எண்ணத்தை, விரோத மனப்பான்மை யை உருவாக்கும் 
என்ற அடிப்படையில் கூட நேரு +அம்பேத்கார்+காந்தி  , உப்பு வேலியை அழித்து இருக்கலாம் .
அல்லது ஆங்கிலேயரை மகிழ்ச்சிப் படுத்த / அவர்களது கட்டாயத்தால் உப்பு வேலி அழிக்கப் பட்டது 
என்று NRI ட்விட்டர் டேக் பாணியில் கருத்து சொல்லலாம்.

உப்பு வேலியை ஏன் அழித்தார்கள் /மறைத்தார்கள் என்னும் ஆய்வை  இனி துவங்கலாம் . நேற்றைய சென்னை விழாவில் இது குறித்து ராய்/சிறில்/ஜெமோ பேசினார்களா என்று தெரிய வில்லை. +K.R Athiyaman +Ramprasath Hariharan 
 நேரு+அம்பேத்கர், ஆட்சிக்கு வந்த உடன் முதல் வேலையாக உப்பு வரி, உப்பு வேலியை அழித்து  உள்ளார்கள் என்று கூகிள் சொல்கிறது.

வங்கத்தில் தான் அதிகார வர்க்கத்தின்  வரி விதிக்கும் கொடுமை அதிகமாக இருந்து உள்ளது, அந்த மரபால் தான் அங்கே பொது உடைமைக் கொள்கை விரைவாக தீவிரமாக பற்றிக் கொண்டதா என்ற ஐயம் எழுகிறது . இன்னமு கொல்கத்தாவில் அதனால் தான் முதலாளிகள், அரசு அதிகாரிகள் மீது ஒரு உள்  வன்மம் நிலவுகிறது.

இங்கிருந்து எழுத்தாளர்கள் இங்கிலாந்து செல்லவும், பரஸ்பரம் விருதுகள் கிடைக்கவும் இது போன்ற முயற்சிகள் உதவலாம் .  
   மராத்தி மொழி  பெயர்ப்பில்(2011) , வேலியை & வேலி  வரலாறை ஏன்  சுதந்திர  இந்திய ஆட்சியார்கள் அழித்தார்கள் என்று மொழி பெயர்ப்பாளர் பகிர்ந்து உள்ளாராம், நண்பர்கள் அறிந்தால் பகிரவும் அது குறித்து 

சனி, 12 ஜனவரி, 2013

வாழந்தவர் கெட்டால் - நாவல் - கநாசு - நற்றிணை பதிப்பகம்


கநாசு  தன பார்வையில் இருந்து (தானே ஒரு பாத்திரமாக) இருந்து எழுதுவதாக கதை அமைந்து உள்ளது .
சென்னை/டில்லியில் வசிக்கும் கநாசு, தான் சிறுவயதில்  வாழ்ந்த/படித்த  தஞ்சாவூரில் ஒரு வாரம், டெல்லிக் கவலைகள் மறந்து  
விரும்பியபடி இருக்கலாம் என்று தஞ்சைக்குச் செல்கிறார் .
அவரின் கல்லூரி கால  நண்பர் ரவியின் அழைப்பின் பேரில் ரவியின் வீட்டிலேயே தங்குகிறார். ரவிக்குத் திருமணமாகி , ஆரம்பப் பள்ளி செல்லும் வயதில் இரண்டு குழந்தைகள். ரவியின் மனைவி ஓரிரண்டு வருடங்களுக்கு முன் காலமானவர். எனவே ரவிதான் அந்தக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார் ஒரு வயதான சமையல் காரப் பெண்மணியின் உதவியுடன்.

முதல் நாள் மாலை ரவியோடு வீதி உலாப் போகிற கநாசு , சதாசிவ மம்மேலியர்   என்பவரைக் காண்கிறார். சதாசிவமைக்  கண்டதும் ரவி விலகுகிறார் 
கநாசு விடம்  சதாசிவம்  குறித்து பேசவும் ரவி  மறுக்கிறார்.  இதனால் சதாசிவம் குறித்து கநாசு விற்கு  ஒரு  ஆர்வம் உருவாகி விடுகிறது 


இந்த ஆர்வத்தின் மூலம் கநாசு  அறிந்து கொள்ளும் விபரங்களே, நிகழ்வுகளே, விளைவுகளே  இந்த நாவல்.
                                     ------------------------------------
சதாசிவத்தின்  தந்தையார்  , தஞ்சையில் மிகப் பெரிய செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருந்தார் . தன்னை விட பத்து வயது குறைந்த , மஞ்சள் நிற தேகம் கொண்ட அழகான பெண்ணை மணந்தவர். இரண்டு மகன்கள், ஒரு பெண் என குடும்பம் செழிப்பாக இருந்து வந்தது. அப்போது அவர்கள் வீட்டிற்கு  வந்த ஒரு மருத்துவருக்கும் சதாசிவத்தின் தாயாருக்கும் இடையே உறவு ஏற்பட்டு விடுகிறது.

தாயாரும், மருத்துவரும் இணைந்து  சதாசிவத்தின் தந்தையின் செல்வத்தை  அதிக செலவு செய்து, செல்வத்தை இழக்கும் நிலைக்கு கொண்டு வருகின்றனர் என்று ஊரில் பேச்சு, உண்மையும் கூட. 
இந்த உறவில் மருத்துவருக்கு ஒரு மகன் பிறக்கிறார் அவர்தான் நம் நாயகன் ரவி. 

இந்த விஷயம் அறிந்ததும் கநாசு விற்குப்  புரிகிறது , இந்த தவறான உறவு சார்ந்த  வன்மம் தான் ரவிக்கும், சதாசிவத்திற்கும்  இடையே   எழுந்துள்ள 
 வெறுப்பிrக்குக்  காரணம் என்று.
 இதை அறிந்த அடுத்த நாள்  ரவி , கநாசு, சதாசிவம்  ஆகிய மூவரும் தஞ்சை ரயில் நிலையத்தில் பரஸ்பரம் சந்தித்து விடுகின்றனர். அப்போது ரவி கூறிய வார்த்தைகள் தாங்காது, ஓடும் ரயிலின் முன்னே பாய்ந்து சத்தாசிவம் மாண்டு விடுகிறார்.
இதை அடுத்து ரவி உடம்பு சரி இல்லாது படுத்து விடுகிறார் மூன்று நாட்கள்.
பின்னர் கநாசு  மெதுவாக ரவியிடம் இந்த பிரச்னை குறித்து பேச முயகிறார். அப்போது ரவி சொல்வது - என் வார்த்தைகள் மூலம் நான் கொலை செய்வது  இது முதல் முறை அல்ல,  சதாசிவம்  இரண்டாவது பலி - முதல் பலி என் மனைவி.

எழுதும் கநாசு விற்கு   மட்டும் அல்ல , நமக்கும் ஆர்வம் கூடுகிறது. 

ரவி சொல்வது- சதாசிவம் எங்கள் வீட்டிற்கு  வந்த பொழுது ஆரம்பத்தில் , என் மனைவியிடம்  ஒரு சகோதரன் போலத்தான் பழகிக் கொண்டு இருந்தார் . ஆனால் ஒரு கட்டத்தில் காதலர்  ஆக முயன்றார். அது உண்மையா, பொய்யா  என்று தெரிய வில்லை எனக்கு, ஆனால் அதைக் காணப் பொறுக்காத/ஏற்றுக் கொள்ளப் பொறுக்காத நான் என் மனைவியை வார்த்தைகளாலேயே சித்திரவதை செய்து கொன்று விட்டேன்.

என் குழந்தைகளைக் கவனித்துக் கொள் என்று கநாசு விடம் கூறி விட்டு ரவி  இறந்து விடுகிறார். இதோடு கதை நிறைவு பெறுகிறது.

 -----------------------------------------------------------------------------------------------------------------------------
நாவல் வாசிக்கும் நமக்கும் தஞ்சையில் உலவுவது போன்ற ஒரு உணர்வை படைப்பாளி  ஏற்படுத்தி உள்ளார் . குறிப்பாக சரஸ்வதி மகால்,  வல்லம் சாலை ஆகிய இடங்கள் குறித்த வர்ணனை.
இரண்டு நாட்கள் மாலை வீதி உலா செல்லும் வரிகளைப் படித்த நமக்கு மூன்றாம் நாள் எப்போது ஐந்து மணி வரும், கநாசு, ரவி வீதி உலா கிளம்புவர் என்ற ஏக்கம் உருவாகி விடும் இடத்தில் கநாசு வெற்றி பெறுகிறார் 

ரவிக்கும் கநாசு விற்கும் இடையே நடக்கும் தத்துவார்த்த விவரனைகள் அனைத்தும் அருமை.
 என்பது பக்கங்கள் நிறைந்த ஒரு நல்ல படைப்பு இது - நற்றிணை பதிப்பகம்- 044 -4358 7070

திங்கள், 18 ஜூலை, 2011

பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்

பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்

வெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எயிதுவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.அபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.

அவன் மகுடியின் ஊதுவாய் எச்சிலால் நிரம்பி வழிந்து விட்டது. அனேக விதமான பாம்புகளுக்குக் கிளர்ச்சியும், ஆனந்தமும் நல்கிய மகுடியின் துவாரங்களில், பிடாரனின் நாற்றம் நிறைந்த எச்சில், நுரை நுரையாகக் கொப்பளித்து, அடைத்துக் கொண்டிருந்தது.

இன்றுபோல அது என்றும் நடந்துகொண்டதே இல்லை. இத்தனையிலும் இருவருக்கொள்ளும் எவ்விதமான குரோதமும் சமீபகாலத்தில் இல்லை.

அப்போது மகுடிகளைச் செய்ய இப்பிடாரன் தன் மாமனுடன் காட்டில் கல் மூங்கில்களைத் தேடி அலைந்தான். மாமன் அவனுக்கு ஆசனாயிருந்து, பாம்புகளையும், மகுடியின் நுட்பங்களையும் குறித்துப் பலவிதமான செய்திகளைச் சொல்லி இருந்தான்.மாமன் பாம்புகளோடு சிறு வயது முதலே வாழ்ந்து, கண்களும், அவன் இடுப்பின் மெலிந்த வளைவும், கால் தொங்கு சதைகளில் உள்ள வங்குச் செதில்களும் அவனையும் பாம்புகளோடு பொருத்திக் கொண்டிருந்தன. வீர்யமுள்ள விஷ ஜந்துகளோடு அவன் காலம் கழித்தும், நல்லதென்று தோன்றியதைச் செய்தும் வாழ்ந்திருந்தான். பாம்புகளிடம் பேசும்விதம் முப்பது வயதுக்கு மேல் பிடிபட்ட தென்றும் , பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாமன் அடிக்கடி சொல்லுவான்.

கிராமங்களை விட்டு மரங்களடர்ந்த சாலைகளின் வழியே போகிறபோது தான் மாமன் பாம்புகள் குறித்த ரகசியங்களைக் கூறுவான்.

கிராமங்களில் மாமன் பாம்புகளைப் பிடித்த விதம், வினோதம் தருவது. தூரத்தில் தெரியும் ஊர்களைப் பார்த்தபடியே இந்த ஊரில் ' பாம்பு வாழ நீதமில்லை' என்று சொல்லி ஒதுங்கிப் போவான். பாம்புகள் இல்லாத ஊர்களில் வாழ்ந்த மனிதர்களின் பேரில் மாமனுக்கு அளவற்ற குரோதமிருந்தது.

பாம்புகள் வாழும் ஊர்களை மாமன் நெருங்குவதைப் பார்க்க, உடனிருப்போர் மனம் புனித நிலை எய்தும். சடைகள் விழுந்த தலை அசைய, பாம்புகள் இருக்குமிடத்தைக் கிரகித்துத் தெய்வ அருள் வந்த பாவத்துடன் செல்வான். அவன் கண்களின் பாப்பா அப்போது ஜொலிக்கும். அவன் எய்திய தீக்ஷன்யத்தில் காது மடல்கள் சிவந்து போகும்.

தெருவின் ஆரம்பத்திலிருந்து தெருவின் இரு ஓரங்களுக்கும், அருள் வந்த உடம்போடு குறுக்கும் நெடுக்குமாக அலைவான். பழைய உடம்பை எங்கோ போக்கி, புடைகளில் ஒளிந்து வாழும் பாம்புகளே உணரும்படி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் கூட பாம்புகளுக்க்காயய்த் திடன் அடைந்து முகப்படுத்தப்பட்ட புது திரேக்கத்தை அப்போது மாமன் அடைவான். மண்ணை ஆள் காட்டி விரலால் தொட்டு நாவில் வைத்துச் சுவைத்துப் பார்த்தும், காற்றை ஆழமாக முகர்ந்தும் பாம்புகள் இருக்குமிடத்தை அறிந்து கொள்வான். பாம்புகளை அறியும் பிடாரர்களில் மாமன் மிகுந்த கீர்த்தி பெற்று இருந்து , அறுபத்தி ஏழாம் வயதில் காலாவதியானான்.

காற்றைவிட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது.பாம்புகளைப் போற்றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்புகளைப் பிடிக்க, ஒருவேளைச் சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். தனக்கென்று சிருஷ்டித்துக் கொண்ட, தர்மத்தின்படி, பிடித்த பாம்புகளை மலைகளின் மேல் பத்துப் பதினைந்து மைல்தூரம் சென்று விட்டு வந்தான். முதுமையால் பீடிக்கப்பட்ட காலத்திலும் கூட இதிலிருந்து அவன் நழுவ வில்லை. நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான் என்று இப்போது தோன்றுகிறது. சர்ப்பங்களைப் போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தை போக்கியும் வாழ்ந்தவன், பட்டினியால் சீரழிந்து திரிந்த விதம் எப்படி என்று தெரிய வில்லை.


இன்று இப்பாம்பின் சினத்தின் முன்னே, பிடாரனுக்கு வரக்கூடாதென்று மாமன் சொன்ன, பாம்பு பற்றிய பயம் பிடாரனுக்கு வந்தது. இருவரும் சிநேகமாகி எட்டு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்று பாம்பாடும் விசித்திரத்தைப புரிந்து கொள்ள முடியாத, பழக்கமற்றவன் போல பிடாரனின் நிலை ஆகி விட்டது. திசைக்குத் திசை சுற்றியாடியது. நிமிர்ந்தும் வளைந்தும் ஆடியதோடு திருப்தியுறாமல் ஆட ஆரம்பித்த குறுகிய பொழுதுக்கு உள்ளேயே ஆட்டத்தின் நுட்பத்தில் ஞானமெய்தி விட்ட பாவனையோடு வேகத்தையும், கண்களில் சாந்த குணத்தையும் காட்டியபடி பிடாரனைக் கிலேசத்திர்க்கு உள்ளாக்கியது.

தன்னுடைய அடிமைத் தலையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ என்று நினைத்தான். மகுடியிலிருந்து குதிரையின் வாய் நுரைக்குச் சமமான பிடாரனின் எச்சில் வலிந்து மண் தரையில் படிந்து இருந்தது. பாம்பின் உடம்பு ஆடலின்போது எச்சில் ஈரத்தில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தது, என்றாலும் குழலூதுவதை நிறுத்துவது விவேகமற்றதென்று உறுதியாக நம்பினான்.

சில வாசிப்புகளில் அது மகிழ்ந்து, அடங்கிச் சுருண்டு , நட்போடு முகர்ந்து அவனுடம்பில் ஏறி இறங்கிக் களிப்பதும் அதற்கொரு வழக்கம்தான். முதலில், இவ்விதமே பின்னால் செய்யுமென்று நம்பிக்கையோடுதானே குழல் ஊதினான் சிறிது நேரம்?. வித்தைகளைப் பணிவோடு செய்வதும், அதற்குள்ள கூலியாக மீண்டும் வித்தைகள் செய்து, ஜனத்திரளை மகிழ்விக்கச் சிறிது உணவே உண்டு ஓய்ந்து கிடப்பதும் அதன் வாழ்வாக இருந்தது.

அது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது. எல்லோர்ரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.

திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை. தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.

சாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான். நாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.

இறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவா ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.


நன்றி அம்ருதா பதிப்பகம், புத்தகம்- வண்ண நிலவன் முத்துக்கள் பத்து.





வியாழன், 7 ஜூலை, 2011

ரெய்னீஸ் அய்யர் தெரு- வண்ண நிலவன்- கிழக்கு பதிப்பகம்





எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் ரெய்னீஸ் அய்யர் தெரு, தலைமுறைகள் தாண்டி போற்றப் படக் கூடிய ஒரு சிறந்த படைப்பு.(நாவல்)
அந்தக் கதையில் களமாக வரும் ரெய்னீஸ் அய்யர் தெரு, பாளையம்கோட்டை காளிமார்க் (இப்போது அரசன் கூல் பார்)பேருந்து நிறுத்தத்தின் அருகில் என்று தெரிந்ததும், அதைப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது.

எனது எதிர்பார்ப்பிற்கும் மேலாக மிகச் சிறந்த , ஜீவன் நிரம்பிய தெருவாகத்தான் இருக்கிறது.

கம்பனின் அயோத்தியை, ராமேஸ்வரத்தை, வியாசரின் மதுராவை கண்ட உடன் வாசகர் எவ்வாறு மகிழ்ச்சி அடைவாரோ, அதே உணர்வை இந்தத் தெருவை தொட்டதும் நான் அடைந்தேன்.

வாசகர்களும் கண்டுகளிக்க உணர , இந்தப் படங்களைப் பதிவு செய்கிறேன்.
தொடர்புடைய பதிவு


.

வண்ணதாசன் மற்றும் வண்ண நிலவன் படித்த பள்ளிக்கூடம்





தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் வண்ணதாசன் மற்றும் வண்ண நிலவன் படித்த பள்ளிக்கூடம், நெல்லை நகர தெற்குப் புதுத் தெருவில் இருக்கும் சாப்ப்டர் கிளைப் பள்ளிக்கூடம் , என்ற தகவல் பவுத்த அய்யனாரின் நேர்காணலில் வண்ண நிலவன் தெரிவித்து இருந்தார்.

நான் அந்தப் பகுதி வழியாக பலமுறை நடந்து சென்றுள்ளேன் என்ற எண்ணத்தால், அந்தப் பள்ளிக்கூடத்தை புகைப்படம் எடுத்து பதிவிட ஆசை வந்தது. எனவே புகைப்படம் எடுத்து பதிவு இட்டுள்ளேன்.

தமிழ் வாசகர்கள் இதைப் பார்த்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் .

பாரதி, வவுசி , அண்ணாதுரை போன்றோர் படித்த பள்ளிகளை காலம் கடந்து போற்றுகிறோம், அவ்வாறு ஒரு நிலை இனி ஏற்பட வேண்டாம் என்ற எண்ணமும் உண்டு.

முக நூலில் , நண்பர் சோமசுந்தரம் (அமெரிக்கா வாழ் தமிழர்) தெரிவித்த தகவல், இப்பள்ளியில் தான் , சமகாலக் கவிஞர் கலாப்ரியா அவர்களும் படித்தார்.

புதன், 6 ஜூலை, 2011

வண்ண நிலவனின் கம்பா நதி- குறுநாவல்- கிழக்கு பதிப்பகம்- படங்கள்







கம்பாநதி முதல் பத்தி இவ்வாறு செல்லும்.
சங்கரன் பிள்ளையும் சூரியும் தெற்குப் புதுத் தெருவில், வாகையடி முக்குத் திருப்பத்தில் திரும்பும்போது மணி நள்ளிரவு இரண்டைத் தாண்டி விட்டது.

வாகையடி முக்கு, தெற்குப் புதுத் தெரு படங்கள்





பக்கம் 64 இல் வரும் சங்கரன் பிள்ளை , சூரி, திருநாவுக்கரசு சீட்டாடும் காட்சி மண்டபம், படங்கள்



மேலும் படங்கள் வரும் பதிவுகளில்

சனி, 14 மே, 2011

மதுமிதா அவர்களின் - இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவுமும்

'அன்னா கரீனினாவை வாசித்த பின், அன்னாவின் வாழ்க்கை பெண்ணின் மன நிலையைப் புரிந்து கொள்ளச் செய்ததும், ஜெயகாந்தனின் 'பாரிசுக்குபோ'வுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவில் வாசிப்பினை அதிகரித்தது.

வெண்ணிற இரவுகளில் ஏழு இரவுகளும் உடன் நடந்து நீ ஏன் முதலில் வரவில்லை , உன்னை மணந்து இருப்பேனே என்னும் கேள்வி பல இரவுகள் விழிப்பினை ஏற்படுத்தியது.

பலி, பிரகாசமான விளக்குகளுடன் ஒரு அறை போன்ற சிறுகதைகள் இன்னொரு தளத்துக்குச் சென்று என்னை சிந்திக்க வைத்தன.

அழிவற்ற காதல், வால்காவிலிருந்து கங்கை வரை, தர்மானந்த கோசம்பியின் தத்துவ இயல்கள் ... என வாசிப்பு விரிய விரிய
புது உலகைக் காண்பதும், சந்திக்கும் மனிதர்களுடன் இன்னும் நேசமாய்ப் பூப்பதும் இயல்பாய் நிகழ்கிறது - மதுமிதா


இரவு பற்றி சமகால எழுத்தாளர்கள், பதிவர்கள் பலர் தங்கள் அனுபவங்களை, பார்வைகளை மிக அழகாக எழுதி இருக்கிறார்கள். பல்வேறு வித கட்டுரையாளர்களை ஒருங்கே இணைத்து ஒரு அற்புதமான படைப்பைத் தந்து உள்ள எழுத்தாளர் மதுமிதா அவர்களுக்கும் சந்தியா பதிப்பகம் மற்றும் குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

படைப்பை அளித்துள்ள கட்டுரையாளர்கள்- கலா ப்ரியா, தமிழ்நதி, ரிஷான் ஷெரிப், நாஞ்சில் நாடன், மதுமிதா , பாஸ்கர் சக்தி, எ முத்துலிங்கம், யுகமாயினி சித்தன், உமா ஷக்தி, கவின் மலர், லதா ராமகிருஷ்ணன், அசோக மித்திரன், ந தேவி, கோ மா கோதண்டம், வைதீஸ்வரன், க மோகன ரங்கன், தி சுபாஷினி , ச விஜய லட்சுமி , ராஜ்ஜா , இந்திரா பார்த்தசாரதி, பாவண்ணன், சக்திஜோதி, நரசய்யா, இளம்பிறை, எஸ் ஷங்கர நாராயணன், இரா முருகன், அரங்க மல்லிகா, தமிழ்மகன், பூ அ இரவீந்திரன், ஜெயந்தி சங்கர், ஆல்பர்ட்,சேவியர், ராமச்சந்திரன் உஷா, நாகரத்தினம் கிருஷ்ணா, தமிழ்ச்செல்வன், அண்ணாமலை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்
0091 44 24896979
www.sandhyapublications.com

எனக்கு தோன்றும் ஒரே குறை- பெரும்பாலான கட்டுரைகள் சோக நிகழ்வுகளையே அடக்கி இருக்கின்றன. இதே இரவு குறித்து எ ஆர் ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ், சின்மயி எழுதி இருந்தால் மகிழ்ச்சி கலந்த அனுபவங்களை எழுதி இருப்பர் என எண்ணுகிறேன்.
ஸ்ரீனிவாஸ் சொன்னார் கிழக்கு சீமையிலே , உயிரே பாடல் பதிவுகள் இரவுகளில் நடந்தன. அளவிலா இன்பம் நிறைந்த இரவுகள் அவை என்றார். அதில் எப்படி சந்தேகம் வரும் நமக்கு.

எழுத்தாளர் மதுமிதா அவர்களின் காலம் பற்றிய புத்தகம் இன்று வாசித்து முடித்து விடுவேன். அது பற்றி அடுத்த பதிவு இட ஆவலாக உள்ளேன்